...
April 26, 2024
#சற்றுமுன்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய யூடியூபர்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய யூடியூபர் 1

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலடித்துக் கொண்டு இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம், கூட்டம், கூட்டமாய் வாக்கு சேகரிக்க தொண்டர்படை களமாடி வருகிறது. இதோடு, அரசியல் கட்சியினர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவிடுகின்றனர்.

இந்த நிலையில், ஒத்தை ஆளாய் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராய் களமிறங்கி, டிஜிட்டல் பிரச்சாரம் மூலம், நாமக்கல்லின் பிரச்சினைகளை பதிவிட்டு வருகிறார் தீபன் சக்கரவர்த்தி எனும் 33 வயது இளைஞர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் லாரி சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தீபன் சக்கரவர்த்தியின் சொந்த ஊர் நாமக்கல். சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக சில ஆண்டுகள் வேலை பார்த்த அவர் அந்த பணியை விட்டுவிட்டு, Chennai Vlogger என்ற யூடியூப் சேனலையும் பக்கத்தை ஆரம்பித்து அதில் பயணங்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார். அவை நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து “தீபன் பாலிடிக்ஸ்” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கினார் தீபன்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாமக்கல் தொகுதியிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட்டார் தீபன் சக்ரவர்த்தி. அந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல், தேர்தல் செலவினங்கள், பிரச்சார கட்டுப்பாடுகள், வாக்குப் பதிவு விதிமுறைகள் என தேர்தல் நடைமுறைகள் குறித்த வீடியோ பதிவுகளை அவரது யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தேர்தல் என்றால் என்ன..? அதனை எவ்வாறு சந்திப்பது? தேர்தலில் போட்டியிட என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட வீடியோ பதிவுகளை வெளியிட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

மற்ற வேட்பாளர்கள் போன்று இல்லாமல் வீட்டிற்கு வீடு சென்று பிரச்சாரம் செய்யாமல் டிஜிட்டல் மூலமாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த வகையில் நாமக்கல் சட்டமன்றத் தேர்தலில் 249 வாக்குகளும் ஈரோடு இடைத்தேர்தலில் 360 வாக்குகளும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக தீபன் சக்ரவர்த்தி போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்டத்தின் பிரதான அடையாளமான லாரி சின்னத்தில் போட்டியிடும் அவர் டிஜிட்டல் மூலமாகவே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் 95 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் வெறும் ஆயிரத்திற்குள் தனது தேர்தல் செலவீனங்களை அடக்கலாம் என்ற புதிய யுக்தியை தீபன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

 


இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் தீபன் சக்ரவர்த்தி கூறுகையில், ஒரு வேட்பாளர் தேர்தல் செலவினமாக ரூ 95 லட்சம் வரை செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. நடைமுறையில், இதைத்தாண்டி பல கோடிகளை செலவிடுகிறார்கள் என்ற நிலையில், டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தால், என்னைப் பொறுத்தவரை ரூ.95 லட்சம் என்பதே அதிகம் என நினைக்கிறேன். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை பதிவிடுவேன். அதோடு, எனக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து எனது வலைத்தளங்களில் பதிவிடுவேன். இதைத் தாண்டு எந்த ஒரு வாக்காளரையும் நான் நேரில் சந்தித்து வாக்கு கேட்க மாட்டேன். எனது இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தனக்கு வாக்களிப்பதாகச் சொல்கிறார்கள்

இந்த தேர்தலில் மொத்தமாக ஆயிரம் ரூபாய் மட்டும் செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.

40 வேட்பாளர்கள் களமிறங்கும் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில், இதுபோன்ற சுவாரஸ்யங்களும் இருந்தால்தானே தேர்தல் களம் கலைக்கட்டும் என்பதில் ஐயமில்லை.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.