...
April 20, 2024
#செய்திகள்

அரசு கால்நடை மருத்துவ கல்லூரிக்கு விரைவில் புதிய மகளிர் விடுதி – எம்பி தகவல்

அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் புதிய மகளிர் விடுதி - எம்பி தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் புதிய மகளிர் விடுதி அமைக்க 50 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து வழங்குவதாக எம்பி ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாநிலங்கவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கல்லூரியில் பயிலும் வெளிமாநில மாணவ, மாணவிகளுக்கு அவர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மாணவிகள்  சிரமம் அடைந்துள்ளனர்

இந்த விழாவில் பேசிய கல்லூரி முதல்வர் செல்வராஜ், “ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ மாணவிகள் விடுமுறைகளை கழிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் வெளிமாநில மாணவர்கள் 2 நாட்கள் விடுமுறையை கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாது, ஏனனில் அவர்கள் 500கிமீ வரை பயணம் செய்து செல்ல வேண்டிய சூழல். அதற்குள் விடுமுறை முடிந்து விடும். தற்போது, குடியரசு தினவிழா அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை வருவதால் தொடர்ந்து 3நாட்களுக்கு கல்லூரி விடுமுறை அளிக்க பட்டுள்ளது. அதனால் குடியரசு விழாவை வெளிமாநில மாணவர்களும் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டுள்ளார். அவரிடம் ஒரு கோரிக்கையை மட்டும் கல்லூரி நிருவாகம் சார்பில் வைக்கப்படுகிறது. கல்லூரியில் அமைந்துள்ள மகளிர் விடுதி போதுமான இட வசதிகள் இல்லாததால் மாணவிகள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே புதிய மகளிர் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நாம் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி, உடை ஆகியவற்றை பின்பற்றினாலும் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையாக உள்ளோம். அரசியலமைப்பு நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பு, எனவே அரசியலமைப்பு கொள்கைகளை நிலை நிறுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் நமது கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகை புரிந்து பயில்வது மிகவும் பெருமையாகும்.

எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம்

கல்லூரி மாணவர்களாகிய நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம். சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பை கற்றுக்கொள்ளுங்கள், அரசியலை கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு கலாச்சாரம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பின் தெளிவை தரும். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மகளிர் விடுதி அமைப்பதற்கு எனது எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளேன். விரைவில் திட்ட மதிப்பீடு செய்ய பட்டு விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடுதியில் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தேவையான நிதியும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும்.

எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்

வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது அவசர காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட இரயில் பயணச் சீட்டு பெறுவதற்கான சிரமங்களை போக்கி பயணச் சீட்டை உறுதி செய்திட எனது அலுவலகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவனம் செய்கிறேன். எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அக்குழுவின் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அவர் கூறினார்.

முன்னதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் தனி செயலர் சரவணன் அவர்கள் பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவது குறித்தும் காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் செல்வராஜ், மாணவர் பேரவை துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட திரளான கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.