...
April 20, 2024
#செய்திகள்

நாமக்கல்லில் ஒரேநாளில் 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2,700 kg of ration rice seized in Namakkal in one day

நாமக்கல் பகுதியில், விற்பனை செய்வதற்காக கடத்திசெல்லப்பட்ட 2,700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, எஸ்.ஐ. பிரசன்னா, சிறப்பு எஸ்.ஐ. ஜானகிராமன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் அருகே பாச்சல் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 32 மூட்டைகளில், 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, அல்லிகாரன்பாளையத்தை சேர்ந்த கணேஷ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, அவர், தற்போது சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்தில் வசித்து வருகிறார். இவர், நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

அதேபோல், நாமக்கல் கொசவம்பட்டி ரோஜாநகர் பகுதியில், குடிமைபொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முட்புதருக்கு நடுவில், 11 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், நாமக்கல் காதிபோர்டு காலனியை சேர்ந்த பாட்டில் மணி (எ) ராமச்சந்திரன், ரேஷன் அரிசி மூட்டைகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர், நாமக்கல் பகுதியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடம், அதிக விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், பாட்டில் மணி (எ) ராமசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், ஒரே நாளில், 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.