...
April 24, 2024
#செய்திகள்

தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Namakkal Consumer Court orders action against private insurance companies..!

இரண்டு சாலை விபத்து காப்பீட்டு வழக்குகளில் ரூ. 32 லட்சம் இழப்பீடு வழங்க, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள வெண்ணங்கல் காடு கிராமத்தில் வசிப்பவர் சுப்ரமணியம். இவரது மகன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம், கல்லூரிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டும் போது விபத்துக்குள்ளாகி இறந்தால் தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டப்படி ரூ. 15 லட்சத்துக்கான காப்பீடு, தனியார் காப்பீடு நிறுவனத்தில் தமிழ்ச்செல்வன் பெற்றிருந்தார்.காப்பீட்டின் படி, இழப்பீடு வழங்க அவரது தாயார் ரேவதி காப்பீடு நிறுவனத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்காததால், இது குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர், அனைத்து ஆதாரங்களையும் காப்பீடு நிறுவனத்திற்கு வழங்கியும், இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காததால், காப்பீடு நிறுவனம் சேவை குறைபாடாக குற்றம் புரிந்துள்ளது. எனவே 4 வாரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத்தொகை ரூ. 15 லட்சம் மற்றும் இழப்பீடு ரூ. 1 லட்சம் சேர்த்து, ரூ. 16 லட்சத்தை, விபத்து நடைபெற்ற நாள் முதல், வழங்கப்படும் நாள் வரை ரூ. 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு வழக்கு

நாமக்கல் அருகே உள்ள சின்னன்னம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 2020 ஜனவரி மாதத்தில், அவரது தந்தைக்கு சொந்தமான காரை ஆந்திர பிரதேசத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இறந்தவரின் தந்தை பழனிச்சாமி தனி நபர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். இதன்படி ரூ. 15 லட்சத்தை வழங்குமாறு காப்பீடு நிறுவனத்தில் கேட்டதில், உரிமையாளரே வாகனத்தை ஓட்டிச் சென்று இறந்தால்தான் காப்பீட்டுத் தொகை கொடுக்க முடியும் என்று காப்பீடு நிறுவனம் கறாராக பேசி பணத்தை தர மறுத்து விட்டது.

இதனால் இறந்து போன சதீஷ்குமாரின் மனைவி சந்தியா ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், இறந்து போன சதீஷ்குமார் மனைவிக்கும், இரண்டு மைனர் குழந்தைகளுக்கும், 4 வாரத்தில் தனி நபர் விபத்து காப்பீட்டு காப்பீடு தொகை ரூ. 15 லட்சம், மேலும், இழப்பீடாக ரூ. 1 லட்சமும் சேர்த்து, ரூ. 16 லட்சம் மற்றும் விபத்து நடந்த நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியும் சேர்த்து, காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் தீர்ப்புகள் விரைவாக வழங்கப்படுவதால் தற்போது மக்களிடம் நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.