...
April 25, 2024
#செய்திகள்

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமையவிருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் எனவும் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 51 கட்ட போராட்டங்களை சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் நடத்தியுள்ளனர். இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அரூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இன்று 52வது கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக்கழக பொது செயலாளர் பாலசுப்ரமணியம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், சிவகுமார், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.