...
April 23, 2024
#செய்திகள்

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை : எம்.எல்.ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை : எம்.எல்.ஏ ஈஸ்வரன்
திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை என காந்தி ஆசிரமம் நூற்றாண்டு துவக்க விழாவில், எம்.எல்.ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட காலத்தில் காந்திய கிராமிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த சபர்மதியில் காந்திய ஆசிரமத்தை காந்தியார் தொடங்கி நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காந்தி ஆசிரமங்கள் தொடங்கப்பட்டது. அதன்படி, திருச்செங்கோட்டில் ராஜாஜி, பெரியார், ஈவேரா ஆகியோரினுடைய முயற்சியால் திருச்செங்கோடு புதுப்பாளையம் பகுதியில் ரத்ன சபாபதி கவுண்டர் என்ற ஜமீன்தார் கொடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது.

தண்ணீர் தேவைகளை தீர்த்து வைக்க புதிய சோலார் பிளான்ட்..!

காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி நூற்றாண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்தி ஆசிரமத்தின் தலைவர் தலைமை வகித்து வரவேற்பு உரையாற்றினார். காந்தி ஆசிரமம் வரலாறு குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், JSW ஸ்டீல் லிமிடெட் துணைத் தலைவர் எம்.என். ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காந்தி ஆசிரமத்திற்கான தண்ணீர் தேவைகளை தீர்த்து வைக்க சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டிருந்தது. இதனை JSW ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தினர் தங்களது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்திருந்தனர். அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் நிறுவனத்தின் துணைத் தலைவர் எம்.என். ரெட்டி சோலார் பிளான்ட்டை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே தற்போது பலருக்கு தெரிவதில்லை. காந்திய கிராமிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த 1924-ல் பெரியாரின் முயற்சியால் ராஜாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற புதுப்பாளையம் ஜமீன்தார் ரத்தினசபாபதி கவுண்டர் 4 ஏக்கர் நிலம் கொடுக்க அதில் உருவாக்கப்பட்ட இந்த காந்தி ஆசிரமம், தற்போது நூற்றாண்டை எட்டியுள்ளது.

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை..!

நூற்றாண்டு துவக்க விழா எளிமையாக நடைபெற்றாலும், நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும்.. திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை, அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்து வந்து அடிமை இந்தியாவில் வாழ்ந்தவர்கள் எப்படி எல்லாம் சிரமப்பட்டு நமக்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் தேசிய சிந்தனை வளர இது உதவும். அதேபோல், காந்தி ஆசிரமத்திற்கு சோலார் பிளான்ட் அமைத்துக் கொடுத்ததோடு ஜமீன் இளம்பிள்ளையிலும் ஒரு சோலார் யூனிட் அமைத்துக் கொடுத்துள்ள JSW ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

மேலும், காந்தி ஆசிரமத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கிற அனைத்து காந்தி ஆசிரமங்களுக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்கி கொடுத்துள்ளோம் என கூறினார். நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் காந்தி ஆசிரம பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.