...
April 25, 2024
#டிரெண்டிங் நியூஸ்

சிறுதானியங்கள் சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் சாதனை

நாமக்கல் மாவட்டத்தில், 2023 -ஆண்டு 79,327 எக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், இன்று (29.12.2023) சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவை முன்னிட்டு, சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் சிறுதானிய உணவுத் திருவிழாவை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவியர்ளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுதானிய உணவுகள் ஊட்டச்சத்து மிகுந்தது 

தற்போது நாம் அனைவரும் அரிசி மற்றும் கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம். அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து மிக்கது. மேலும், பண்டைய காலங்களில் உணவு பழக்க முறை சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டே அமைந்திருந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக தற்போது இராகி, சாமை, சோளம், கம்பு, திணை, பனிவரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

 

நாமக்கல் மாவட்டம் போதமலையில் சிறுதானியங்கள் 

நாமக்கல் மாவட்டம் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தாண்டு தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக போதமலை கிராமத்தில் ஆண்டொன்றுக்கு 2,000 டன் அளவில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக போதமலை பனிவரகு சிறப்பு மிக்கது. ஆனால் அப்பகுதியில் போதுமான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் சிறுதானியங்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்து வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் துயரை போக்கிடும் வகையில் போதமலை பகுதிக்கு சாலை அமைத்திட ரூ.140.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.  

சிறுதானிய சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் சாதனை 

தமிழகத்தில் சராசரியாக 8.67 இலட்சம் எக்டர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு சிறுதானிய பயிர்கள் சாகுபடி இலக்காக இவ்வாண்டு 80,100 எக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 79,327 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 8,000 எக்டர் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகறது என தெரிவித்தார்.

தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறுதானிய உணவுத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட சிறுதானிய உணவுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43.00 இலட்சம் நேரடி கடனுதவிகளையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் அருண், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி முதல்வர் கோவிந்தராசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.