...
April 26, 2024
#செய்திகள்

இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி – எல்.முருகன்

இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி - எல்.முருகன்

மக்கள் ஏற்கனவே, இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி என்று  கூறி வந்தார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

பிரதமர்  நரேந்திர மோடி, இன்று காலை, தொலைக்காட்சி மூலம், “மனதின் குரல்” நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த நிகழ்ச்சி , நாமக்கல் நகர பாஜக சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் பெரிய திரை மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை பால்வளம். மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் முருகன், நகர பாஜக தலைவர் சரவணன், பாஜக நிர்வாகிகள் முத்துகுமார் ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர்.

மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மனதின் குரல்” நிகழ்ச்சியில், தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 109 முறையாக இந்த மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சமுதாய பணிகளை பாராட்டி, மத்திய அரசின் மூலம் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு விருதுபெற்றவர்களை, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்ரப்பன் என்பவர் “அழிந்து வரும் நாட்டுபுற பாடல்களை பொதுமக்களுக்கு எடுத்துச்சென்றதைப் பாராட்டியும், பல்வேறு சமூக நலப்பணிகளை செய்த மறைந்த சினிமா நடிகர் விஜயகாந்தை பாராட்டியும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன”.

குழப்பம் நிறைந்த கூட்டணி – இண்டியா கூட்டணி:

இண்டியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை, மக்கள் குழப்பம் நிறைந்த கூட்டணி என்று ஏற்கனவே கூறி வந்தார்கள். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மம்தா பேனர்ஜி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தற்போது பீகாரில் நிதீஷ்குமாரும் கூட்டணியை மாற்றியுள்ளார். கேரளாவில் கம்யூவும், காங்கிரசும் ஒரே கூட்டணியில் எப்போதும் போட்டியிட முடியாது. மேலும், தமிழகத்திலும் இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

மீண்டும் பிரதமர் மோடி:

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்திலும் அதிக பெரும்பான்மை பலம் பெற்று விளங்குகிறது. தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் தற்போது உள்ளனர். புதுச்சேரியில் ஒரு பாஜக ராஜ்யசபா எம்.பி உள்ளார். தற்போது தமிழகத்தில் அதிகமான பொதுமக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி வருகின்றனர்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும். நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜக 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று  நரேந்திரமோடி, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராவது உறுதி செய்யப்பட்டதாகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.