...
April 22, 2024
#செய்திகள்

தமிழர்களின் உரிமைகள் மீது வெந்நீரை பாய்ச்சுவதா..? தமிழச்சி தங்கபாண்டியன் கடும் தாக்கு..!

Election campaign meeting titled Stalin's Voice for Restoring Rights

இந்தியாவின் அடுத்து பிரதமரை உருவாக்கும் நிலைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கூறினார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், எம்.எம்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு தமிழர்களின் உரிமைகள் மீது வெந்நீரை பாய்ச்சி வருகிறது, இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே இயக்கம் திமுக, நமக்கான உரிமைகளை உரிமைகளாக தான் கேட்க வேண்டும், பிச்சைகளாக கேட்க கூடாது என்பதற்கான கூட்டம் இந்த “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டம், மத்திய அரசு, சர்வாதிகாரம் என்ற ஆயுதத்துடன் செயல்படுகிறது. மத்திய அரசு, மதவெறி என்ற ஆயுதத்தை எடுத்தால், தமிழக முதல்வர், சிறுபான்மை, மத நல்லிணக்கம், திராவிடமாடல் என்ற ஆயுதத்துடன் நிற்கிறார்

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக திமுக வளர்ந்துள்ளது, பாஜகவை தனி ஒருவராக எதிர்க்கிற வல்லமை கொண்டவர் ஸ்டாலின் மட்டுமே, இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அனைத்து துறையிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மின்னனு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, நிதி அயோக் குறியீட்டின் படி, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை, வலுவான எதிரியை எதிர்க்க போகிறோம் என எண்ணம் தோன்றலாம், ஆனால் அது மாயத் தோற்றம், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியின் முதுகெலும்பாக திமுக உள்ளது, இரட்டை என்ஜின் போல மத்திய அரசு ஆளுநரை கொண்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது,

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்து வரும்போது, அவர்களுக்கு எதிராக ஆணி படுக்கையை விரித்து போராட்டத்தை முடக்கும் மனப்பாங்கு கொண்டதாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் மத்திய அரசிற்கு 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திருப்பி வழங்கி வருகிறது, பெரும் மழையின் காரணமாக தென்சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் போர்க்கால நடவடிக்கையினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது, குஜராத் மாநிலத்தில் வெள்ளம் வந்தால் பிரதமர் மோடி உடனடியாக ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு நிதி வழங்குகிறார், ஆனால் தமிழகம் சார்பில் கேட்கப்பட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனாது..? உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்ற தென் மாநிலங்களின் குரலை நசுக்குகின்ற அரசாக மத்திய அரசு உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களை வெல்வது கட்டாயம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் திமுக நகர செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.