...
April 19, 2024
#செய்திகள்

ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு..!

A new apartment at a cost of Rs.76.88 crore

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 848 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதற்கட்டமாக 121 பயனாளிகளுக்கு
குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி, பட்டேல் நகரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 848 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதற்கட்டமாக 121 பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி, பட்டேல் நகரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் தலா ரூ.9.07 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியல் அறை மற்றம் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் 400 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அனைத்தும் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற நகர்ப்புர ஏழைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த இடம் திருச்செங்கோடு நகர் பகுதிக்கு மிக அருகில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான வசதி நிறைந்த விலைமதிப்பு மிக்க பகுதியாகும். இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பை தரமாக கட்டிய மாவட்ட நிர்வாகத்திற்கும், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


இக்குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், 3 மின்மோட்டர்களுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி. 6 ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.06 கோடி மதிப்பில் குடிநீர் விநியோகம் மற்றும் ரூ.5.28 கோடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டப்பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கழிவு நீர் தொட்டியும், குடிநீர் விநியோகத்திற்காக வரகூராம்பட்டி ஊராட்சியால் 8 எண்ணிக்கையிலான தெருக்குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால், 848 குடியிருப்புகளுக்குமாக செயல்படுத்தப்பட்டு வரும் 2.47 இலட்சம் லிட்டர் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு அடுத்த கட்டமாக மற்ற பயனாளிகளுக்கும் குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுதா தங்கவேல், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரெ.சுதர்சன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.