...
April 23, 2024
#செய்திகள்

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், 3 வழக்குகளுக்கு தீர்வு

Namakkal Consumer Court orders action against private insurance companies..!

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், 3 வழக்குகளில், சமரச தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ. 34 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் (42). அவருக்கு சொந்தமாக பொக்லைன் வாகனம் உள்ளது. 2022, மே மாதம், பொக்லைன் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டதால், அவற்றை சரி செய்ய, ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹைட்ராலிக் சர்வீஸ் நிறுவனத்தில் கொடுத்துள்ளார். பழுது பார்க்கும் செலவுகளுக்காக, ரூ. 78 ஆயிரத்து 650 ரவிக்குமார் செலுத்தி உள்ளார்.

வாகனத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து எடுத்து வந்து, உபயோகப்படுத்தும்போது, மீண்டும் ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவித்ததை அடுத்து, இரண்டு முறை மெக்கானிக் அனுப்பியும் பழுதை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. அதையடுத்து, 2023 மார்ச்சில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இப்பிரச்னையை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள மத்தியஸ்தராக வழக்கறிஞர் பாலசுப்ரமணியத்தை நியமனம் செய்து, கடந்த வாரம், மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் உரிமையாளர் ரவிக்குமாருக்கு, ஹைட்ராலிக் நிறுவனம் மூலம் ரூ. 18 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

அதேபோல், நாமக்கல் பாரதி நகரை சேர்ந்த சுப்பராயன் (80), இவர் கடை மீது தாக்கல் செய்திருந்த வழக்கில், வக்கீல் முரளிகுமார் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்தியதில், கடைக்காரர் ரூ. 6,000 இழப்பீடு வழங்கியதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மேலும், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு இனிப்பகம் மீது தாக்கல் செய்த வழக்கில், வழக்கறிஞர் சந்திரசேகரன் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்தியதில், கடை உரிமையாளர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்கியதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இவ்வாறு ஒரே நாளில் மொத்தம் 3 வழக்குகளில் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் ரூ. 34 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.