...
April 20, 2024
#செய்திகள்

திருச்செங்கோட்டில் ஒரேநாளில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்..!

திருச்செங்கோட்டில் ஒரேநாளில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாயால் என்ன செய்வது என தெரியாமல் திருச்செங்கோடு நகராட்சி தவித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று (06.02.24) நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலர், தங்கள் பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், ஒரே நாளில் எட்டு பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்களின் புகாரைத் தொடர்ந்து, நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பொதுமக்களை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே நாய்கள் சுற்றித் திரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களைப் பிடித்து கர்ப்ப தடை செய்து, அந்தந்த பகுதிகளிலேயே விட்டாலும், அவைகள் வெறிபிடித்து பொதுமக்களை கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறது. நாய்களை கொல்லக்கூடாது, சித்திரவதை செய்யக்கூடாது என ப்ளூ கிராஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது நாய் உயிர் முக்கியமா? மனித உயிர் முக்கியமா? என முடிவெடுக்க எடுக்க முடியாத நிலையில்  தடுமாற்றத்தில் இருக்கிறோம். பொதுமக்களின் புகாரின் படி நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து அந்தந்த வார்டு பகுதிகளில் விட்டு வருகிறோம். என்ற போதிலும் இதற்கு நிரந்தரமான தீர்வினை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி தர வேண்டும் என தெரிவித்தார்.

திருச்செங்கோடு மட்டும் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் சாலையில் வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர். கிராமப்புறங்களில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் வளர்க்கும் கால்நடைகளை வெறி நாய்கள் கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் கால்நடைகள் வளர்ப்போருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை கொல்ல கூடாது என சட்டம் இருந்தாலும் மனிதர்களின் உயிரை விட விலைமதிக்க முடியாதது வேறு ஏதேனும் உள்ளதா என்கிற கேள்வியை முன்வைக்கின்றனர் நாமக்கல் வாழ் மக்கள்..

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.