May 8, 2024
#செய்திகள் #டிரெண்டிங் நியூஸ்

நாமக்கல்லில் இப்படியும் சில கிராமங்களா..! 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமங்கள்

நாமக்கல்லில் இப்படி ஒரு கிராமங்களா..! 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமம்

நாமக்கல் மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடத கிராமங்கள் உள்ளன. அது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகக் கொண்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை களைகட்டும். 

சிங்கிலிபட்டியில் 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடப்படுவதில்லை  ..!

இந்த ஆண்டு  பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால், நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட போது மட்டுமல்ல, கடந்த நூறு ஆண்டுகளாகவேபொங்கல் பண்டிகையை கொண்டாடுவதைத் தவிர்க்கும் விநோதப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர்.

நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிபட்டி என்னும் அழகிய கிராமம். பொங்கல் பண்டிகை என்பதால் தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இந்த கிராமம் மட்டும் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

100 years

“நாய் உண்டதால்” பண்டிகை வேண்டாம் என முடிவு..!

இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கேட்டபோது, “கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது சாமிக்கு படையல் வைத்திருந்த பொங்கலை “நாய் ஒன்று சாப்பிட்டது”. இதை அபசகுணமாக கருதிய கிராம மக்கள், அந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக இறைவனுக்கு வழிபாடு நடத்தப்பட்டபோது, கிராமத்தில் உள்ள கால்நடைகள் இறந்தன. தொடர்ந்து நடந்த இதுபோன்ற அசம்பாவிதங்களால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கத் தொடங்கினர். இச்சூழலில் கடந்த நான்கு வருடங்களாக, இந்த மூடநம்பிக்கையை தகர்த்தெறிய சிங்கிலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ மட்டும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வந்தார். ஆனால் அவருடன் எந்த கிராம மக்களும் பொங்கல் வைக்க முன்வராமல் இருந்துள்ளனர். இதனால் தற்போது அவரும் பொங்கல் வைப்பதில்லை.

பொங்கல் பண்டிகை தொடர்பான எந்த விழாவும் கிராமத்தில் நடத்துவதில்லை. கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை. பொங்கல் வைத்தால் தங்களது வீட்டில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளதாக தெரிவித்தனர்”.

8 கிராமங்களில் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,  வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனுார்புதுார், தட்டான்குட்டைபுதுார், ஆலங்காடுபுதுார், உடும்பத்தான்புதுார், தாசன்புதுார் ஆகிய, எட்டு கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இந்த கிராமங்களில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன், நிலச்சுவான்தாரர் ஒருவர் பொங்கல் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடியதாகவும், அப்போது ஊரில் உள்ள பெரும்பான்மையானோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மனிடம் முறையிட்டனர். அப்போது, அங்குள்ள ஒருவர் அருள்வாக்கு கூறியபோது, ‘பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளது. ‘இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம்’ என கூறியதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, கிராம மக்கள்நலமாக இருக்கவும், கால்நடைகளுக்கு எந்த நோயும் வராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த எட்டு கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்து பின்பற்றி வருகின்றனர். இந்த பகுதியினர் இந்த ஆண்டும், தங்கள் வழக்கப்படி, பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை.

கொண்டாட்டங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துஇருக்க முடியாது. எனினும் நூறு ஆண்டுகளாக, அதாவது நான்கு தலைமுறைகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாத கிராமங்கள் நமது நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன என்பது நம்மை சற்றே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க ; நாமக்கல்லில் மனைவியிடம் வசமாக சிக்கி கொண்ட போலி கலெக்டர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *